மெடிக்ளெய்ம் எதிர். மருத்துவக் காப்பீடு- ஓர் ஒப்பீடு
மெடிக்ளெய்ம் எதிர். மருத்துவக் காப்பீடு- ஓர் ஒப்பீடு
மெடிகிளைம் மற்றும் நலக் காப்பீட்டு பாலிசிகள் ஆகிய இரண்டுமே ஒன்றுதான் என்று நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இவை இரண்டுமே மருத்துவமனைச் சிகிச்சை, மருத்துவச் செலவுகள் ஆகியன சம்பந்தப்பட்டவை என்றாலும், இவை இரு வெவ்வேறு பாதுகாப்புத் திட்டங்கள். அது எப்படி? இங்கே அதை விளக்குகிறோம் -
மெடிகிளைம் என்பது, மருத்துவமனைச் சிகிச்சையின் போதும், சில சமயங்களில் விபத்து அல்லது நோய் காரணமாக வீட்டில் உள்ளபோதும் மருத்துவச் செலவுகளை உட்படுத்தும் ஒரு பாலிசி. மெடிகிளைம் இரு வகைப்படும்: கேஷ்லெஸ் மற்றும் ரீஇம்பரஸ்மென்ட். கேஷ்லெஸ் மெடிகிளைம் வசதியை இந்தப் பாலிசியின் கீழ் வரும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் பெறலாம், ரீஇம்பரஸ்மென்ட் மெடிகிளைமில் மருத்துவ பில்களைச் சமர்ப்பிப்பதன் பேரில் உங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை நிறுவனம் ஈடுசெய்யும்.
மறுபுறம், நலக் காப்பீடு என்பது மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகளுக்கு அப்பால் பிற தொடர்புடைய செலவுகளையும் உட்படுத்தும். இவற்றில் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய பராமரிப்பு, மருத்துவர் கட்டணங்கள் போன்றவை அடங்கும். மெடிகிளைமில் உள்ளது போலவே, நலக் காப்பீட்டிலும் கேஷ்லஸ் மற்றும் ரீஇம்பரஸ்மென்ட் வகைகள் உண்டு.
மெடிகிளைம் மற்றும் நலக் காப்பீட்டுக்கு இடையிலான வேறுபாடு
மெடிகிளைம் மற்றும் நலக் காப்பீடு பல அம்சங்களில் வேறுபடுகின்றன. இங்கே மெடிகிளைம் பாலிசி மற்றும் நலக் காப்பீட்டை சுருக்கமாக ஒப்பிட்டு அடிப்படை அம்சங்களை வழங்குகிறோம்-
மருத்துவமனைச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும்
மெடிகிளைம் பாலிசியில் ஒரு குறிப்பிட்ட வரம்பு மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கான மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகளும் சில சமயங்களில் வீட்டுப் பராமரிப்பும் மட்டுமே உட்படும். மொத்த மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரையிலேயே மெடிகிளைமில் பெற முடியும். மறுபுறம், நலக் காப்பீட்டில் மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய பராமரிப்பு, நோயறிதல் பரிசோதனைகள், மருத்துவர் கட்டணம் உள்ளிட்ட பல செலவுகள் உட்படும்.
ஆம்புலன்ஸ் கட்டணங்கள்
நீங்கள் கடுமையாக நோய்வாய்ப்படும் போது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் சென்றுவரும் தேவை இருக்கும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு மேம்பட்ட பரிசோதனைகளுக்காக ஆம்புலன்ஸ் மூலம் இன்னொரு மருத்துவமனை அல்லது சோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்படலாம். மெடிகிளைமில் இந்தக் கட்டணங்கள் உட்படாது. எனினும், நலக் காப்பீட்டுத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை இந்தக் கட்டணங்களை உட்படுத்தும்.
மகப்பேறு பலன்கள்
நலக் காப்பீட்டுத் திட்டத்தில் தாய்மார்களுக்கென பிரசவ கால, அதற்கு முந்தைய, பிந்தைய செலவுகளை உட்படுத்தும் வசதி உள்ளது, அது சிசேரியனாக அல்லது பிறந்த குழந்தைக்கான மருத்துவச் சிகிச்சையாக இருந்தாலும் சரி. ஆனால், மெடிகிளைமில் மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகள் மட்டுமே உட்படும், பிற கூடுதல் செலவுகள் உட்படாது.
பகல்நேரப் பராமரிப்புப் பலன்கள்
மெடிகிளைமில் மருத்துவமனைச் சிகிச்சை மற்றும் சில நோய்கள் மட்டுமே உட்படும். ஆனால், கண்புரை அறுவைசிகிச்சை போன்ற பகல்நேரப் பராமரிப்பு நடைமுறைகளுக்கு பொதுவாக மருத்துவமனைச் சிகிச்சை தேவைப்படாது. இச்சூழ்நிலைகளில், உங்கள் மெடிகிளைம் இந்தச் செலவுகளை உட்படுத்தாது. இதற்கு மாறாக, உங்கள் வழக்கமான நலக் காப்பீடு இத்தகு மருத்துவ நடைமுறைகளுக்கு ஏற்படும் செலவுகளை உட்படுத்தும்.
விலை மற்றும் பலன்கள்
நலக் காப்பீட்டுத் திட்டங்களின் வரம்பு மெடிகிளைம் வரம்பை விட விரிவானது என்பதால், நலக் காப்பீட்டின் விலை அதிகம். அதேவேளை, நீங்கள் நோயுற்றால், செலுத்திய பிரீமியங்களுக்கு மேல் அது பலனளிக்கும்.
ஆக, எது சிறந்தது, மெடிகிளைமா அல்லது நலக் காப்பீடா?
மேற்கூறிய விளக்கத்தின் படி, நலக் காப்பீட்டை ஒப்பிடும்போது மெடிகிளைமின் வரம்பு குறுகியது. நலக் காப்பீட்டில், கையிலுள்ள பணத்தைச் செலவு செய்கிறோமே என்ற கவலை இருக்காது. மெடிகிளைம் அப்படியல்ல. இருப்பினும், மெடிகிளைம் ஓர் அடக்கமான திட்டம், அதற்குச் செலுத்தும் தொகைக்கு ஏற்ப அதன் பலன்கள் அமைந்துள்ளன.
எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது உங்கள் தேவைகளைப் பொறுத்தது. நீங்கள் சமீபத்திலேயே சம்பாதிக்கத் தொடங்கியவர் எனவே அதிகம் செலவு செய்ய முடியாது என்றால், மெடிகிளைம் உங்களுக்குச் சிறந்தது. எனினும், உங்களால் அதிகப் பிரீமியம்களைச் செலுத்த முடியும் என்றால், நலக் காப்பீட்டுத் திட்டம் அதிகப் பொருத்தமானது. வசதி வாய்ப்பு இருந்தால், மெடிகிளைம் மற்றும் நலக் காப்பீடு என இரண்டையும் பெறுவது பற்றி யோசியுங்கள். ஏனென்றால், மெடிகிளைமும் நலக் காப்பீடும் ஒன்றிலுள்ள குறைகளை மற்றொன்று நிரப்பும். அதேவேளை, இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரு விஷயத்துக்குப் பயன்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும், எதிர்காலத்தில் முரண்கள் மற்றும் உரிமைகோரல் நிராகரிப்பை தவிர்க்க, முன்கூட்டியே இவ்விரு திட்டங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் படியுங்கள்.
மெடிகிளைம் மற்றும் நலக் காப்பீடு - ஓர் ஒப்பீடு
| காரணிகள் | மெடிகிளைம் | நலக் காப்பீடு |
|---|---|---|
| வரையறை | மெடிகிளைம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகளை மட்டுமே உட்படுத்தும் ஒரு பாலிசி | நலக் காப்பீட்டில் மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகள் மட்டுமின்றி பிற மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சைச் செலவுகளும் உட்படும் |
| காப்பீட்டில் உட்படுபவை | இது பொதுவாக மருத்துவமனைச் சிகிச்சைச் செலவுகளை மட்டுமே உட்படுத்தும். சில சமயங்களில் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளையும் இது உட்படுத்தலாம் | இதில் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், பரிசோதனைகள், பகல்நேரச் சிகிச்சைகள், ஆலோசனைக் கட்டணம், மகப்பேறு செலவுகள் போன்ற கூடுதல் செலவுகளும் உட்படும். |
| கூடுதல் காப்பீடு | கூடுதல் காப்பீடுகள் இல்லை | உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கவலைக்கிடமான நோய்கள், மகப்பேறுக் கவனிப்பு போன்ற பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கான கூடுதல் காப்பீடுகள் உள்ளன. |
| உரிமைகோரல் தகுதி | பலன்களைப் பெற, காப்பீடு செய்துள்ளவர் மருத்துவமனைச் சிகிச்சை பெற வேண்டும் | பலன்களைக் கோர, காப்பீடு செய்துள்ளவர் மருத்துவமனைச் சிகிச்சை பெறவேண்டிய அவசியமில்லை. மருத்துவமனைச் சிகிச்சை எடுக்காமலே நீங்கள் வழக்கமான பரிசோதனைகளுக்கும் பிரசவத்திற்கு முந்தைய, பிந்தைய மற்றும் பகல்நேரப் பராமரிப்புக்கான செலவுகளுக்கும் காப்பீடு வசதி பெறலாம் |
| நெகிழ்வுத்தன்மை | அடக்கமான ஆனால் நெகிழ்வற்ற ஒரு திட்டம். மருத்துவமனைச் சிகிச்சை எடுக்கும் சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளது. | காப்பீடு செய்துள்ளவர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதைத் தகவமைத்துக் கொள்ளும் வசதி இருப்பதால் இது மிகவும் நெகிழ்வானது, உதாரணமாக காப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் திட்டத்தில் கூடுதல் ரைடர்களைச் சேர்க்கலாம் |