வீட்டுக் கடன் பாதுகாப்பு ஏன் அவசியம் என்பதற்கு 5 காரணங்கள் | எஸ்பிஐ லைஃப்
வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் என்று வரும்போது, பலருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. சிலர், வீட்டுக் கடன் பாதுகாப்பை ஏற்கனவே உள்ள டேர்ம் இன்சூரன்ஸுடன் சேர்த்துப் பெறலாம் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர், இது போன்ற திட்டங்கள் வாங்குபவர்களுக்குப் பயனளிப்பதை விட அதிகத் தீங்கையே விளைவிக்கின்றன என்றும் கூறுகின்றனர். வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் டேர்ம் இன்சூரன்ஸ் போலச் செயல்படுகின்றன. கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், இந்தக் காப்பீடு உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கிறது. பின்னர், குடும்பத்தினர் கோரும் இந்தப் பாதுகாப்புத் தொகையை, மீதமுள்ள வீட்டுக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தலாம். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் முடியும் வரை இந்தக் காப்பீடு உங்களைப் பாதுகாக்கிறது. நாம் ஏன் வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்களை வாங்க வேண்டும்? அத்தகைய திட்டங்களின் பயன் என்ன? சில காரணங்களைப் பார்ப்போம் -
சொத்து மற்றும் பிற பிணையங்களைப் பாதுகாக்கிறது
கடன் வாங்கியவர் இறந்தால், கடன் பாக்கியை அடைக்க வீடு மற்றும் பிற மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். குடும்பத்தினர் எப்படியோ வீட்டைக் காப்பாற்றி விட்டாலும், உயர்மதிப்புள்ள வேறு உடமைகளை இழப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் கடன் பாக்கியை அடைத்து உடமைகளைக் காக்கும். எனவே, கடன் வாங்கியவர் இறந்தால் கூட, அது குடும்பத்தையோ அவர்களின் வாழ்க்கைத் தரத்தையோ பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
சுலபமாகச் செலுத்தும் பிரீமியம்
வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் போலவே செயல்படுகின்றன. ஒருமுறைப் பிரீமியத்தைச் செலுத்தி இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம். கடன் வாங்குபவருக்கு பிரீமியம் தொகை கட்டுப்படியாகாத ஒன்றாக இருக்கலாம். அத்தகு சூழ்நிலையில், பிரீமியம் தொகை கடன் தொகையுடன் சேர்க்கப்பட்டு அது மாதாந்திர அல்லது காலாண்டு இஎம்ஐ மூலம் கழிக்கப்படும். உதாரணமாக, மொத்தக் கடன் தொகை ரூ. 25 லட்சம் மற்றும் ஒருமுறைப் பிரீமியம் ரூ.2 லட்சம் என வைத்துக்கொள்வோம். மொத்தக் கடன் தொகை ரூ.27 லட்சமாக மாறி, இஎம்ஐ மூலம் அது செலுத்தப்படும். இதன் மூலம் பிரீமியம் செலுத்துவது சுலபமாகும். திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, ஒருமுறைப் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு சரண்டர் வசதி கிடைக்கலாம்.
வரிச் சலுகைகள் மற்றும் மன அமைதி
வீட்டுக் கடன் பாதுகாப்பு காப்பீட்டிற்காக நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு, 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C- இன் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம். இருப்பினும், நீங்கள் பிரீமியம் பணத்தையும் கடனாகப் பெற்று, அந்தத் தொகை உங்கள் மாதாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் EMI-இல் சேர்க்கப்பட்டிருந்தால், இந்த விலக்கு பொருந்தாது.
பேரழிவு ஒருபோதும் ஏற்படாது என்று நீங்கள் நம்பலாம், ஆனால் மிக மோசமான நெருக்கடியின் போதும் உங்களின் மிகவும் மதிப்புமிக்க சொத்தான உங்கள் வீடு பாதுகாக்கப்படும் என்பதை அறிந்துகொள்வதற்காக, இந்தப் பாதுகாப்பை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிப்பது மிகவும் அவசியமாகும்.
வீட்டுக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது
சந்தையில் ஒரே மாதிரியான பல திட்டங்கள் இருப்பதால் வாங்குபவர் பெரும்பாலும் குழப்பமடைகிறார். வீட்டுக் கடன் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அது பொதுவாக வீட்டுக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. கடன் வழங்கும் நிதி நிறுவனமே உங்களுக்கேற்ற பல்வேறு வீட்டுக் கடன் பாதுகாப்புத் திட்டங்களை வைத்திருப்பார்கள். இந்தத் திட்டங்களை அவர்களிடம் தான் வாங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, இத்திட்டத்தை வீட்டுக் கடனுடன் சேர்த்தும் வாங்கலாம் அல்லது பின்னர் வேறு நிறுவனத்திடமும் வாங்கலாம். இதை முற்றிலும் நீங்களே முடிவுசெய்யலாம்!