நிதி சார்ந்த 5 புத்தாண்டுத் தீர்மானங்கள்
நிதி சார்ந்த 5 புத்தாண்டுத் தீர்மானங்கள்
2020 முடிவுறும் இவ்வேளையில், 2021-க்கு திட்டமிடத் தொடங்குவோம். அவ்வாறு திட்டமிடும் போது, உங்கள் நிதி சார்ந்த புத்தாண்டுத் தீர்மானங்களை மறந்துவிடாதீர்.
வரும் ஆண்டில் உங்கள் சேமிப்புகள் மற்றும் முதலீடு மூலம் அதிகபட்சப் பலனைப் பெற நாங்கள் சில நிதி-சார்ந்த புத்தாண்டுத் தீர்மான யோசனைகளை வழங்குகிறோம்.
1. புத்தாண்டு நிதி இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள்
2021 புத்தாண்டில் நீங்கள் பணம் சேமித்து அடைய விரும்பும் நிதி இலக்குகளை பட்டியலிடுங்கள். அது ஒரு சேமிப்புத் தொகையாக, முதலீட்டு இலக்காக அல்லது நிதிக் குறிக்கோளாக இருக்கலாம். எழுத்துப்பூர்வமான பட்டியல் தெளிவான பார்வையைத் தரும், அதற்கேற்ப நீங்கள் திட்டமிடலாம். உங்கள் தற்போதைய நிதி நிலையை மனதில் கொண்டு பட்டியலை மறுபரிசீலனை செய்யுங்கள். பிறகு, இந்த ஒவ்வொரு இலக்குக்கும் பணம் ஒதுக்குவதை மேலும் திறம்படச் செய்ய முடியும். இப்புத்தாண்டு நிதித் தீர்மானங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாக இருக்கலாம். இறுதியாக, இந்த நிதி இலக்குகளை அடைய உதவும் நிதி உத்திகளைத் தேர்வுசெய்யுங்கள்
2. எதார்த்த நிலை பட்ஜெட் தயாரிக்கவும்
நீங்கள் பேரார்வத்தினால் மிகை நம்பிக்கை கொண்டு உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட இலக்குகளை வகுக்க நேரிடலாம். புத்தாண்டு நிதித் தீர்மானங்கள் பெரும்பாலும் எதார்த்த நிலைக்கு மாறாக இருப்பதாலேயே தோல்வியடைகின்றன. எனவே, புத்தாண்டு நிதி இலக்குகளை வகுப்பதற்கான முதல் படி, உங்கள் சக்திக்கு ஏற்ற பட்ஜெட் திட்டத்தை உருவாக்குவது. பின்பற்ற முடியாத அளவுக்கு கறாரான பட்ஜெட்டை திட்டமிடாதீர். உங்கள் அடிப்படை மாதாந்திர செலவுகள், கூடுதல் செலவுகள், வேறு பொறுப்புகள் ஆகியவற்றை மதிப்பிடுங்கள். அத்தியாவசியமற்ற செலவுகளை இணங்கண்டு குறைத்திடுங்கள். இதன்படி, உங்கள் சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு ஓர் இலக்குத் தொகையை ஒதுக்குங்கள். இந்த பட்ஜெட்டை உறுதியாக பின்பற்றுங்கள். ஒரு திடமான பட்ஜெட், நடைமுறைக்கு ஏற்றதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கும். இது உங்கள் இலக்குகள் மற்றும் நிதித் தீர்மானங்களை அடைய உதவும்.
3. சலுகைகளால் மயங்கிவிடாதீர்
தள்ளுபடிகள், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’, கேஷ்பேக் உள்ளிட்ட பல சலுகைகள் நமது கவனத்தை ஈர்த்து ஆர்வத்தைத் தூண்டும். நாம் இந்த விழாக்கால அல்லது மற்ற கால சலுகைகளால் மயங்கி, செலவைக் குறைப்பதாக நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், இந்தச் சலுகைகள் நம்மை வீண் செலவுக்குத் தள்ளுகின்றன. ஆக, சேமிப்பை அதிகமாக்க இது ஒரு மிகச்சிறந்த புத்தாண்டு நிதித் தீர்மானம்.
உங்கள் தேவைக்கும் நிதித் திட்டத்துக்கும் ஏற்ப பொருட்களை வாங்குங்கள். இந்த 2021 புத்தாண்டில், இத்தகு கவர்ச்சியான சலுகைகள் சார்ந்த செலவைக் குறைப்பேன் என உறுதியெடுங்கள், அப்போது உங்கள் நிதி நிர்வாகத்தில் பெரியதொரு சாதக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
4.அவசரகால நிதியில் முதலீடு செய்யுங்கள்
இந்தப் புத்தாண்டில், சுகாதாரம், குடும்பம், கல்வி அல்லது இன்னபிற நிதி விவகாரங்கள் சார்ந்த அவசரத் தேவையைச் சமாளிக்க அவசர நிதி உருவாக்குவேன் எனத் தீர்மானம் எடுங்கள்.
இத்தகு நிதியை உருவாக்க குறிப்பிட்ட நடைமுறை எதுவும் இல்லை. ஒரு தனி சேமிப்புக் கணக்கைத் திறந்து, அதில் ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கலாம். உண்மையில், சம்பளம் வந்ததுமே தவறாமல் அதில் ஒரு பகுதியை அவசர நிதிக்கு ஒதுக்குங்கள். இதை சுய கட்டுப்பாட்டுடன் பின்பற்ற வேண்டும். அவசரத் தேவை இன்றி இந்த நிதியில் கைவிடாதீர். நெருக்கடியான சூழ்நிலையில் இந்த நிதி கைகொடுக்கும்.
5. புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்
செல்வம் ஈட்டும் நோக்கில் நிதிப் பத்திரங்கள் மற்றும் பிற முதலீடுகளில் முதலீடு செய்வது ஒரு முக்கிய நிதித் தீர்மானம். எனினும், கவர்ச்சியான லாபத்தை வாக்களிக்கும் ஒவ்வொரு திட்டத்திலும் மயங்கி முதலீடு செய்வது கூடாது. உங்கள் இலக்குகள் மற்றும் நிதி ஆற்றலுக்கு ஏற்ப, உங்களுக்கு மிகப் பொருத்தமான திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். முதல் முதலீடு உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் சுகாதாரம் சார்ந்து இருக்க வேண்டும். சந்தையின் போக்கில் நிதானம் இழந்துவிடாதீர். தேவைப்பட்டால், முதலீடு செய்யும் முன் ஒரு நிதி நிபுணரை ஆலோசியுங்கள்.
நடைமுறைக்கு உகந்த, பலனளிக்கக்கூடிய இந்த புத்தாண்டு நிதிக் குறிப்புகள் நிச்சயமாக உங்கள் நிதித் திட்டத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கும்.